Saturday, September 25, 2010

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி 1

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி  1  

இந்திய‌ ச‌முதாய‌ம் ப‌ல‌ சாதிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌தாக‌ உள்ள‌து. இந்த‌ சாதி அமைப்பு உருவான‌து ப‌ற்றி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் கொடுக்க‌ப் ப‌ட்டு உள்ளன‌.

ந‌ம்முடைய‌ ஆய்வு இந்த‌ சாதி பிரிவினை முடிய‌வும், ஒரே ச‌முதாய‌மாக‌ உருவாக‌வுமான‌ வ‌ழி முறைக‌ளைப் ப‌ற்றிய‌து ஆகும்.


 இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து? அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து. ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌ கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர். ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.


சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னுக்கு த‌ன்னால் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான். எந்த‌ அளவுக்கு ஒரு ம‌னித‌ன் க‌னவானாக‌ இருக்கிறானோ, அந்த‌ அள‌வுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து.
எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.


பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.


ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து,  ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.


அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது. வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.


எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.
சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது. மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!


மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது. அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.
நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.


ஆனால் சாதிகளை அழிக்க பலருக்கு மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர்.


சட்டம் , ஒழுங்கு, நீதி இவை நம்மைக் காக்கும் என்று எண்ணவில்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் வலிமை இல்லாத சூழல் உள்ளது.


 தமிழ் நாட்டிலே யாரும் தான் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியைப் போடவில்லை. ஆனால் தக்க நேரத்திலே அதை வெளிப்படுத்தி, தன்னுடைய பெயரோடு சேர்த்து போஸ்டர் அடிப்பார்கள்.
தமிழ் நாட்டிலே எத்தனை அரசியல் வாதிகள் மனப் பூர்வமாக  சாதிகள மறைந்து ஒன்றுபட்ட  சமுதாயம் உருவாக வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது கணிக்க அரிதான ஒரு விடயம்.

அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!


எனவே நமக்கு முன்னே உள்ள பணி எவ்வளவு சிக்கலானது என்று எண்ணுங்கள். ஆனால் நம்பிக்கையை விடாதீர்கள்.

இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம்.
தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது.


 இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.