Saturday, January 15, 2011

மந்திரத்தில் மாங்காய் விழாது - சங்கராச்சாரியார் அதிரடி !

இந்து மதம் ஆழமான ஆன்மீக சிந்தனைகளையும் , விரிவான பல ஆன்மீக முன்னேற்ற முறைகளையும் உடையது.


தனக்கு எதுவுமே வேண்டாம் என்று காட்டுக்கு சென்று கனிகளையும், கிழங்குகளையும் உண்டு தவம் செய்யும் சித்தனும் இந்துதான், அவ்வப் போது கோவிலுக்கு சென்று வழிபடுபவனும் இந்துதான். எந்த வழிபாடும் செய்யாவிட்டாலும், யாருக்கும் தீங்கு நினைக்காமல், யாரையும் ஏமாற்றாமல், தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று இருப்பவனும் இந்துதான். இந்து மதம் ஒருவன் தன் கடமைகளை சிறப்பாக செய்தால் அதுவே சிறந்த ஆன்மீக முயற்சி என்கிறது. தியாகம், தியானம், தவம், பக்தி, யோகம்… இவ்வாறாக பல ஆன்மீக முறைகளை முன் வைக்கிறது.இவற்றில் ஒரு முறைதான் யாகம் அல்லது வேள்வி.


அவரவர்க்கு பொருத்தமானதை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்.


இந்து மதத்தின் மந்திரங்களில் இரண்டு வகை உண்டு.

ஒன்று அறிவைத் துலக்கி உண்மையை  தேடும் ஆராய்ச்சி, அவற்றில் கண்டுணர்ந்த முடிவுகள் ஆகியவற்றின் தொகுப்பான உப நிடத மந்திரங்கள்.


உதாரணமாக,
  உண்மையே  வெல்லும் - ”சத்யமேவ ஜெயதே”"என்பது முண்டக உபநிடதத்தின் ஒரு வாக்கியம் ஆகும்.


உத்திஸ்டத,  ஜாக்கிரத, பிராப்யவரான்   நிபோதித”  – (எழுமின்,  விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்”) என்பது கட உபநிடத வாக்கியம்  ஆகும்.


இன்னொரு வகையான மந்திரங்கள் மக்கள நலனை முன்னிட்டும், சொந்த விருப்பத்தின் காரணமாகவும் தேவர்களை  நோக்கி வேண்டப்படுவதாக அமைந்து உள்ளது. இவைகள் யாகத்தின் போது சொல்லப் படுகின்றன.
யாகம் என்பது பெரும்பாலும் அரசர்களால் செய்யப் படுவது. யாகத்தின் போது ஏழை எளியவர்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குதல் முக்கிய மாக வற்புறுத்தப் பட்டுள்ளது. தானம் இல்லாத யாகம் வீண் என்று சொல்லி உள்ளனர்.

இந்துக்களின் அடிப்படையான புனித நூல்கள் ரிக், யஜூர், சாமம் , அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், மற்றும்பகவத் கீதை உள்ளிட்ட ஸ்ருதி எனப் படுபவை ஆகும்.

ஒவ்வொரு வேதத்திலும்,  யாகங்களை செய்ய வேண்டிய முறைகள் அவற்றை செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஆகியவை தெளிவாக விளக்கப் பட்டு உள்ளன.

உலகின் முதல் வாக்கியம் என்று ஜெர்மானிய அறிங்கர் மாக்ஸ் முல்லரால்  சொல்லப் பட்ட,  அக்னி மீலே புரோஹிதம்” என்று தொடங்கும் ரிக் வேதத்தின் முதல் செய்யுள், இந்த வேள்வி மந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


வேதங்களின் முடிவுப் பகுதியான வேதாந்தம், மனித வாழ்க்கை, மனித உயிர், அது விடுதலை பெற்ற நிலையை அடையும் முறைகள் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும், அறிவிப்புகளும் உள்ளன.
வேதங்களை கற்பதும், ஓதுவதும், பிறருக்கு பயிற்று விப்பதும், இந்து மதத்திலும் முக்கிய செயலாக இருந்தது. 

வேதங்களை தொடர்ச்சியாக சரியான ஓசை மற்றும் இசை நயத்துடன் உச்சரிக்கும் போது, அவை கேட்போருக்கு மனதிலே ஆன்மீக உணர்வை வூட்டுவதாக இருந்தது.

காலப் போக்கில்   வேதங்களை படித்து மந்திரங்களை சரியாக உச்சரித்தால் போதும் என்கிற எண்ணம் பலரின் மனத்தில் தோன்றி இருந்தது.
மந்திரங்களை  உச்சரித்தால் போதும், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் தீரும் என்று எண்ண ஆரம்பித்தனர்.


ஆனால் ஆதி சங்கரர் அது போதாது என்பதை அறிந்து கொண்டார்.  ஒருவர்  தன் மனதில் ஆசைகளை  குறைத்துக் கொண்டே வந்து , மனதிலே அமைதியை  நிலவச் செய்து, தன்னுடைய உண்மை நிலையை அறிவதாலேயே துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


எனவே வெறுமனே மந்திரங்களை உச்சரித்து மங்களம் பாடினால் ஒருவன் காக்கப் பட மாட்டான் என்பதை குறிக்கும் விதமாக “‘நஹி நஹி ரக்ஷதி,  டுக்ருங் கரனே”  என்று பாடினார் சங்கராச்சாரியார்.


உபநிடத வாக்கியங்களான
அசத்தோமா சத் கமய , (From untruth to tuth / from illusion to truth)
தமசோமா ஜ்யோதிர்கமய ( From darkness to light )”" 
போன்றவை குறிக்கோளை உணர்த்தும், மக்களின் அறிவைத் தூண்டும் வாக்கியயங்கள், அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியில் நாம் செல்ல வேண்டும், வெறுமனே அவற்றை உச்சரித்தால் போதாது என்பதை அதிரடியாக தெளிவு படுத்தி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


நன்கு வேதங்களையும் கற்று தேர்ந்தாலும், அவற்றில் சொல்லப் பட்டுள்ள மந்திரங்களி, தெளிவாக பிழை இல்லாமல் உச்சரித்தாலும் அவை எல்லாம் ஒருவனைக் காக்காது. சிறு வயதில் குழந்தையாகவும், பின்னர் இளைங்கனாகவும், பின்னர் முதியவனாகவும்… இப்படி தன் நிலைமை  மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதன் தன்னை அரசனாகவோ , ஆண்டியாகவோ  கருதிக் கொண்டாலும் கடைசியில் பிடி சாம்பலாகிறான் அல்லது மண்ணுக்குள் மக்குகிறான்.

எனவே எத்தனை வேதங்களை கற்றாலும், இன்ப  துன்பங்களை சமமாக என்னும்  மன நிலையை அடையும்  படிக்கு ஒருவன்  தன்  சிந்தனை , சொல், செயல்  பக்குவப் பட்டு உயர் மன  நிலையை  அடைவதே அவன் விடுதலை அடைவது ஆகும் என்கிற கோட்பாட்டையே சங்கராச்சாரியர் சொல்லுகிறார். புத்தரும் அதே கோட்பாட்டையே சொல்கிறார்.

 புத்தருக்கும் சங்கரருக்கும்  உள்ள  வித்யாசம்( on philosophical terms) என்ன வென்றால், விடுதலை அடைந்த பின் அந்த உயிரின் நிலை என்ன என்பது பற்றியே- புத்தர் விடுதலை அடைந்த பின் ஒன்றுமில்லை, சூனியம் தான், கஷ்டம் தீர்ந்து விட்டது அப்புறம் என்ன என்கிறார், ஆதி சங்கரர் அந்த உயிரின் நிலை விடுதலை பெற்ற, அழிவற்ற , துன்பங்கள் இல்லாத நிலையிலே தொடர்ந்து உயிரோடு இருப்பதாகவும், தன்னுடைய உண்மை நிலையை அந்த உயிர் அறிந்ததாகவும் – எல்லா உயிரும் உண்மையில் அழிவற்றதாக அளவற்ற வலிமை உடையதாக வேறுபாடில்லாமல் ஒன்றாகவே இருப்பதாகவும் சொல்கிறார்.


உண்மையை உணர்ந்து   விடுதலை அடையாத  உயிர், மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து தொடர்ந்து துன்பத்தில் உழல்வதாக  கிட்டத்தட்ட இந்து மத ஞானிகள்   அனைவரும் சொல்லுகின்றனர்.

இந்தக் கோட்பாடு இந்து புத்த, சமண மதங்களின் மையக் கோட்பாடாக,  தத்துவ இணைப்புக் கோட்பாடாக உள்ளது.

காசியில் ஒரு வேத பாடசாலையில் பண்டிதர்களுடன் விவாதித்து விட்டு வெளியே வரும் போது வேதம் படித்த ஒருவர் “‘டுக்ருங் கரனே”" என்னும் சமஸ்கிருத இலக்கிய பத்தை திரும்ப திரும்ப சொல்லி மனப் பாடம் செய்து கொண்டிருப்பதை கண்டார்.


இக்காலத்திலும் நாம் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி யை உரு அடித்து அப்படியே அடி மாறாமல் எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம் அல்லவா. ஆனால் வெறுமனே உரு அடிப்பது உபயோகம் இல்லை. அதைப் புரிந்து கொள்வதும் அடுத்த நிலையே. சோதனை சாலையில் அந்த பரிசோதனையை செய்து சரி பார்ப்பது, தானே ஆராய்ச்சின் முடிவை அறிந்து கொள்வது இவையே ஒருவனை அறிஞன்  ஆக்கும் அல்லவா.


அதைப் போல மந்திரங்களை உச்சரித்தால் போதும், அந்த மந்திரங்கள் தங்களைக் காக்கும் என்கிற நினைப்பை மாற்றி, கனவில் இருந்து எழுப்பி, ஒருவன் தன்னைத் தானே உயர்த்தி மனதை வலிமை பெறச் செய்து உண்மையை அறிய வேண்டும் என்கிற  பகுத்தறிவுப் பாதைக்கு அவர்களை கொண்டு வந்த சங்கராச்சாரியார் உண்மையில் ஒரு அதிரடி புரட்சிக்காரரே!

No comments:

Post a Comment