Tuesday, October 12, 2010

கற்பூர நாயகியே கனகவல்லி.....!

“சென்னைக்கு அலுவல் நிமித்தமாக செல்கிறேன். அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என்ன’”, என்று  வட இந்தியவை சேர்ந்த  நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார்.

மகாபலிபுரம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். மெரீனா பீச்சுக்கும் சென்று வாருங்கள் என்றேன்.


போன வாரம் அவரை சந்தித்தேன். சென்னைக்கு சென்று வந்தீர்களா என்றேன்.


சென்னை இஸ் நைஸ், மகாபலிபுரம் குடைவரைக் கோவில்கள்  அதிசயமான கலை.  மெரீனா பீச்சும் நன்றாக இருந்தது. அலைகள் வேகமாக வருகின்றன என்றார்.
அதே நேரம் நான் குறிப்பிட்டு சொல்ல  வேண்டியது இன்னும்  ஒன்று உண்டு என்றார்.


“நாங்கள் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியது அதிகாலை  மூன்று மணிக்கு ,  வூரே அடங்கி இருந்தது. எங்கள் டாக்சி ரோட்டிலே வேகமாக சென்றது.  அந்த பின்னிரவு நேரத்திலும் எங்களை உற்சாகப் படுத்தியது என்ன தெரியுமா?

வழி முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப் பட்ட  தேவியின் பெரிய படங்கள் எங்களுக்கு ஒரு நம்பிக்கையும் , மகிழ்ச்சியும் தருவதாக இருந்தன” என்றார்.


அந்த தேவியின் பெயர்,  கருமாரி அம்மன் என்றேன்.
”தமிழ் நாட்டில் பலரும் நாத்தீகவாதிகள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மக்கள் எவ்வளவு பக்தியாக இருக்கிறார்கள்.  எங்களை ஒவ்வொரு நாளும் காலையில் எங்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர், ஆட்டோவை ஓட்டும் போது வழியில்   தேவியின் கோவில் வரும்போதெல்லாம் வணங்கிக் கொண்டே சென்றார். உண்மையான பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.


     
“காலையும்  மாலையும் நல்ல அருமையான பாடல்கள் ஒலிக்கின்றன, தமிழ் மொழி எனக்கு தெரியாததால் நான் அவற்றை உணர முடியவில்லை” என்று சொல்லி விட்டு ஒரு ட்யூனை  ஹம் செய்து காட்டினார்.


இது தமிழ் நாட்டில்  மிகவும் பிரபலமான பாடல்
”கற்பூர  நாயகியே கனகவல்லி, 
காளி மகமாயி கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!!”
அந்தப் பாடலை பாடிக் காட்டினேன்.


“இந்தப் பாட்டுதான், இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அந்தப் பாட்டின்  பொருளை அவருக்கு சொன்னேன். அந்தப் பாட்டை எனக்கு அனுப்புங்கள் என்றார்.  அவருக்கு அனுப்பி விட்டேன்.
இங்கேயும் பதிவு செய்து இருக்கிறேன். கீழ்காணும் சுட்டியில் கிளிக் செய்து பாட்டைக் கேட்கலாம்.

http://www.raaga.com/player4/?id=12045


“இந்த தேவி உற்சவம் மிக சிறப்பாக நடக்கிறது. நாங்கள் ஒரு நாள் சென்று வரும்போது  அப்படியே வண்டியில் இருந்து இறங்கி தேவியை வணங்கினோம், எத்தனை மக்கள் கூட்டம்,” என்று ஆச்சரியப் பட்டார் அந்த வட இந்தியாவை சேர்ந்த நண்பர்.


தமிழ் நாட்டில் கருமாரி அம்மன் வழிபாடு முக்கியமானது.
சென்னையில் ஆடி மாதத்தில் கருமாரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடை பெறுகிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பங்கு பெரும் விழாவாக கருமாரி அம்மன் விழாக்கள் உள்ளன.


தமிழர்கள் தாயை தெய்வமாக வழிபடுபவர்கள். தங்கள் தெய்வத்தை தாயாக கருதி வழிபடுபவர்கள்.  உலகின் மிக சிறப்பான வழிபாட்டு முறைகளில் கருமாரி அம்மன் வழிபாட்டு முறையும் ஒன்றாக இருக்கிறது.

”நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும், அம்மா
நெஞ்சினில் உன் திருநாமம்  வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்,
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்.
…..
மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா
மடி மீது பிள்ளை என்னை தள்ளலாமா?’”


இப்படியாக கடவுளை தன்   அன்னையாகவே கருதி பாடி இருக்கிறார்.
இவ்வாறாக வழிபாடும் அப்பாவி பக்தர்களே இந்து மதத்தின் வேர்கள் , விழுதுகள் எல்லாமுமாக இருக்கின்றனர்.


துறவு என்பதும் இந்து மதத்தின் முக்கியமான ஒரு ஆன்மீக முறையே. மிகப் பழைமையான துறவு முறை இந்து மதத்தின் துறவு முறையே. ஆனாலும் பெரும்பாலான மக்கள் இல்லறத்தவராக வாழ்கின்றனர்.


தத்துவ அடிப்படையிலே புத்தர் யாகங்களை விட ஆசையே வெல்லும்  துறவும் , தியானமும் ஆன்மீக  உயர்வுக்கு அதிகம்  உதவக் கூடியவை என்கிற கோட்பாட்டை நிலை நிறுத்தி விட்டு சென்றார். புத்த மதத்திலே துறவிகள்  ஓசையில்  மனக் குவிப்பு செய்தல் போன்ற தியானப்  பயிற்ச்சிகளை மேற்கொண்டனர்.


ஆனால் சாதாரண மக்களின்  கடவுள் வழிபாடு கோட்பாட்டை  பவுத்தர்கள் இல்லாமல் செய்து விட்டனர் என்பதை சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதனால் இல்லறத்தவர்கள் தங்கள் ஆன்மீக தேடலுக்கு வழி தெரியாமல் திகைத்து நின்றனர்.


இத்தகைய கால கட்டத்திலே ஆதி சங்ககரர் தத்துவ அடிப்படையில் பவுத்தர்களை ஓவர் டேக் செய்து தன்னுடைய தத்துவ வெற்றியை நிறுவினார். அதே கையேடு அப்பாவி மக்களின் அன்னை வழிபாட்டை மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

எல்லாம் ஒன்றே என்னும் அத்வைதக் கோட்பாட்டினால் தத்வத்திலே தங்கம் வென்ற ஆதி சங்கரர், அந்த நிலையை அடைய அன்னை ஆதி பராசக்தி  வழி பாட்டை முக்கிய  வழி களுள் ஒன்றாக வைத்தார்.
“அங்கம் ஹரே புளக பூஷன மாஸ்ரயந்தி”  என்றும்,
“பஜே சாரதாம்பா மஜாஸ்ரம் மதம்பாம்” என்றும் தேவி வழிபாட்டில் , அன்னை வழி பாட்டில்  எந்த தடையும் இல்லாத படிக்கு அதை முக்கிய வழி பாட்டு முறை ஆக்கினார்.


இந்தியா முழுவதும் தேவி வழிபாடு மீண்டும் திரும்பியது.

 இன்றைக்கு கருமாரி அம்மனை வழிபாடு செய்யும் சாதாரண மக்கள் உண்மையான ஆதி சங்கரரின் சீடர்கள என்று சொன்னால் அது மிகச் சரியான கருத்து.