Monday, January 10, 2011

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!

சங்கீத சீசன்  சென்னையில் களை கட்டுகிறது.  பிளைட் பிடித்து வெளி நாட்டில் இருந்து பலரும் சென்னைக்கு பறந்து வருகின்றனர். சென்னையில் பல சபாக்கள் உள்ளன. எல்லாம் ஹவுஸ் புல். சீட் கிடைப்பது அரிது.  புதிய  இளம் கலைங்கர்களுக்கு பாட இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டது எல்லாம் சினிமாப் பாட்டுதான்.  “மை நேம் இஸ் பில்லா” , “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” போன்ற பாடல்கள் தெருவிலே ஒலித்துக் கொண்டு இருக்கும். எனக்கு தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்த கர்நாடக சங்கீதம் என்றால் எனக்கு புரியவே புரியாது.
என்னடா இது ஆஆ,  ஆஅ …..என்று அரை மணி நேரம் இழுக்கிறார்கள், இதை  இவ்வளவு பேர் உட்கார்ந்து கேக்குறாங்க, என்ன இருக்கு இதுல … என்று உண்மையிலேயே எனக்கு புரியாது.


ஆனால் கடந்த 8 வருடங்களாக கர்நாடக இசையை சிறிது சிறிதாக  ரசிக்க  ஆரம்பித்திருக்கிறேன் என்றால்,  இன்னும் சொல்லப் போனால் நான் வீட்டிலே பாடவும் செய்கிறேன் அதற்க்கு காரணம்  திரு. பால முரளி கிருஷ்ணா, இளையராஜா,  திருமதிகள்   எம். எஸ். எஸ்.  , எம். எல்.வி. ,  டி.கே.பி   ஆகியோரின் பாடல்களை சி.டி.யில்  கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் தான். 






மேலே தொடரு முன் இசை ஞானி இளையராஜா அவர்களின்   இந்தப் பாடலை  காணுமாறு, கேட்குமாறு கோருகிறேன். இது சினிமாப் பாடல்தான்.

http://www.youtube.com/watch?v=-h96lau-B0I&feature=related


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்,

 அதில் வாழும் தேவி நீ, இசையை மலராய் நானும் சூட்டுவேன்!

ஆத்மா ராகம்  ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே,

 உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
……
இந்த பாடல் ஒரு காதலன் தன காதலியை நோக்கி பாடும் பாடலாகும். ஆனாலும் அந்த காதலன் ஒரு பாடகன் பாத்திரமாக  உள்ளதால், அந்தப் பாடகன் இசையின் கூறுகளை தன் காதலிக்கு விளக்கி வாழ்வையும்  இசையையும் ஒப்பு நோக்கி இருக்கிறார்ன். உயிரின் ஜீவ நாடி சரியான இடை வெளியில் துடிப்பது போல இசைக்கு தாளம் முக்கியமான உயிர்த் துடிப்பாக உள்ளது.

காமம் தேடும் உலகிலே, கீதம் என்னும் தீபத்தால்,

ராம  நாமம் மீதிலே, நாத தியாக ராஜரும்,

ஊனை உருக்கி  உயிரில் விளக்கை ஏற்றினார் அம்மா, 

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!

இசை துறையில்  சிறந்து விளங்கிய  தியாகராஜ சுவாமிகளை பற்றியும் பாடலில் குறிப்பிடுகிறார். இசையையும் ஆன்மீகத்தையும் தன் இரத்தமும் மூச்சுமாக வைத்து வாழ்ந்தவர் தியாகராஜர்.

 சத்குரு   தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை மிக அற்புதமானது, இலக்கண சுத்தமாக எதுகை மோனையுடன் கூடிய 600 க்கும் மேற்பட்ட பாடல்களை  அவர் இயற்றி உள்ளார். அவை எல்லாவற்றுக்கும் இராகங்களின் மூலம் இசையை அமைத்து தானே பாடியும் இருக்கிறார். பாடாலாசிரியர் , இசை அமைப்பாளர், பாடகர் ஆகிய மூவராகவும் அவரே இருந்து இருக்கிறார்.


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தன்னுடைய பாடலுக்கோ, இசைக்கோ அவர் பணம் எதையும் வாங்கவில்லை.  வீதியில் தன்னுடைய பாடல்களை பாடிக் கொண்டே உஞ்சி விருத்தி என்னும் பிச்சை எடுத்து, அதை வைத்து கஞ்சி குடித்து வாழும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் அவர்.  


தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், இவரை தன் அரசவையில் ஆஸ்தான கவிஞராக பதவி  அளித்து ஆயிரம் பொன்னும் அளித்து அவரை அழைத்த போதும்,    அவர் பதவியையும் மறுத்து, பணத்தையும் மறுத்து மக்கள கவிஞராகவே இருந்து விட்டார்.


அவர் தலைவராக ஏற்ற இராமரின் கொள்கைப் படியே, பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டக் கூடிய வேட்டி போன்றது என்பதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

தியாகராஜரின் பாடல்களின் அர்த்தத்தை மனதில் வாங்கி , ஆராய்ந்து அதில் கலப்பவர்கள்  மனதிலே உள்ள நல்ல குணங்கள் இன்னும் அதிகமாகும் வகையிலே, மனதிலே அமைதி உருவாகும் வண்ணம் பாடலின் பொருளும் இசையும் ஆக்க பூர்வமாக  அமைந்து உள்ளன. 

பகுத்தறிவையும், நம்பிக்கையையும் இணைத்து ஒரு மிகச் சிறந்த ஆன்மீக வழியை இசையின் மூலம் வழங்கி இருக்கிறார் சத்குரு  தியாகராஜா சுவாமிகள்.

No comments:

Post a Comment