இந்த மந்திரத்தின் பொருள் என்ன, அதன் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்குகிறோம். இந்த கட்டுரையை “எல்லோரும் பூணூல் அணியலாம்” என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக வெளியிடுகிறோம் என்பதைக் குறிப்பிடுகிறோம். ஏனெனில் பூணூல் அணிந்த பின், ஆன்மீக முயற்சிக்கு உதவும் முறைகளில் காயத்ரி மந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது.
ஆன்மீகம் என்பது மனிதன், விடுதலை அடைந்த நிலையை, துன்பம், இன்பம் இரண்டையும் கடந்த அமைதி நிலையை அடைவது என்பதாக முன்பே சொல்லி இருக்கிறோம். நாம் இப்போதைய நிலையில் சூழ்நிலையின் தாக்கத்தால் இயற்கையின் விதியால் கட்டுண்டு இருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும் அவ்வப்போது அடி வாங்கி , இறுதியில் மாபெரும் அடியை- மரண அடியை பெறுகிறோம். எந்தக் கோமானாக இருந்தாலும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
முதலில் சிறு குழந்தையாக இருக்கிறோம், பிறகு சிறுவனாக, பிறகு வாலிபனாக, பிறகு முதியவனாக …இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் நான் யார்? சாகும் போது உடலுடன் சேர்ந்து நானும் அழிகிறேனா, அல்லது உயிர் என்ற ஒன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறதா?இதற்க்கு விடை என்ன? உண்மை என்ன? இனி என்ன நடக்கப் போகிறது, இன்னும் எத்தனை கஷ்டங்கள், வரவுகள், செலவுகள், எதுவுமே தெரியாமல் இருட்டாக இருக்கிறதே. எதுவுமே தெரியவில்லை. கும்மிருட்டு.
எந்த ஒரு கருத்தானது இத்தகைய இருளில் இருந்து ஒளிக்கு இட்டு செல்லக் கூடுமோ, எந்த ஒரு நிலையானது அழியும் நிலையில் இருந்து அழியாத நிலைக்கு இட்டு செல்லுமோ, அந்த உண்மையை ஒருவன் தானே உணரும்போது, அவன் விடுதலை பெறுகிறான். அந்த ஒளி யை அடைவதே என் குறிக்கோள், அந்த ஒளியை நான் வாழ்த்துகிறேன், எந்த ஒளி எல்லா உண்மைகளையும் தன்னகத்தே உடையதாக இருக்கிறதோ அந்த ஒளி என் அறிவை தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும் என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள் சாரம் எல்லாம்.
எவ்வளவு உயர்ந்த நோக்கம்! உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது- எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு !
“ஓம் பூர் புவ ஸ்வஹா தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந பிரசோதயாத்”
ஓம்:
பூர் : எல்லா சக்திகளின் ஆதர சக்தியாக
புவ : துன்பங்களை அழிப்பதாக,
ஸ்வஹா :நிலையான ஆனந்தத்தை தருவதாக உள்ள
தத் :அந்த
ஸவிதுர் : ஒளி
வரேண்யம் : மிகச் சிறந்த (ஒளியானது)
பர்கோ : கவலையை அழிப்பதுமான
தேவஸ்ய: மேலான (ஒளியை)
தீமஹி: தியானிக்கிறேன்
தியோ: அறிவை
யோ : எது
ந : நமது
பிரசோதயாத் : தூண்டுகிறதோ, உண்மையை உணரச்செய்கிறதோ
“நமது அறிவைத் தூண்டி உண்மையை அறிய செய்யும் மேலான ஒளியை நான் உணருமாறு தியானிக்கிறேன்”
உண்மையை உணர்த்தும் படிக்கான அறிவைத் தூண்டும் ஒளியைஅடைய விரும்பி, தன்னுடைய சொத்து, பத்து, புகழ், கவலை, லாப, நஷ்டம் எல்லாவற்றையும் பற்றிய கவலையை விட்டு, முழு விடுதலையை நோக்கமாக கொண்டு அந்த நோக்கத்தையே செய்யுளாக்கி மனக் குவிப்பு செய்து தியானப் பயற்சியில் ஈடுபடுவதுதான், காயத்ரி மந்திரம் சொல்லும் முறையாகும்.
அமைதியான இடத்திலே தனிமையிலே மனத்தைக் குவித்து உண்மையை நோக்கிய பயணத்தை துவக்குகிறான், காயத்ரி உபாசகன்.
ஒளி என்பது பற்றி ஜனகரும் , யான்க்வல்ஞரும் செய்த விவாதத்தை இங்கே தருகிறேன்.
எப்போதும் ஒருவனுக்கு ஒளி தரக் கூடியது எது?
சூரியன் …
ஆனால் சூரியன் இரவில் இல்லை.
அப்படியானால் விளக்கு , அது எப்போதும் ஒளி தரும், …
ஆனால் விளக்கு எண்ணெய் இருக்கும் வரைதான் ஒளி தரும்…
அப்படியானால் ஒருவனுக்கு எப்போது ஒளி தரக் கூடியது எது?
ஒருவனின் அறிவை ஒளி பெறச் செய்யும் ஒளியே எப்போதும் அவனுக்கு உதவும் மேலாம் ஒளி!
இருளில் வாழும் உலக மக்கள் அனைவரின் அறிவிலும் ஒளியை பெற வேண்டும் என்கிற சிந்தனையை உருவாக்கி அவர்களை ஒளியை நோக்கி இட்டு செல்லும் மிக சிறந்த சிந்தனையாக காயத்ரி மந்திரம் உள்ளது. இது உலக மக்கள் அனைவருக்கும் உரிய து. இதை அவசரம் அவசரமாக ஒப்புக்குப் பாடாமல் , அதிகாலையில் அமைதியான நேரத்தில் பொறுமையாக கவலை எல்லாம் விட்டு முழுமையான மனக் குவிப்புடன் உண்மையை அறிந்து விடுதலை பெற வேண்டும் என்கிற தீவிரமான நோக்குடன் பயிற்சி செய்வது, ஒருவரின் மன நிலையை, மனக் கட்டுப்பாட்டை உயர்த்தினால் அதில் ஆச்சரியம் இல்லை!
Title; அறிவை தரும் ஒளியைக் கோரும் காயத்ரி மந்திரம்! (எல்லோரும் பூணூல் அணியலாம் – பகுதி 2)